தற்போதைய
- முகூா்த்தம், தொடா் விடுமுறை: 2,910 சிறப்பு பேருந்துகள்by தினமணி செய்திச் சேவை on September 3, 2025 at 11:50 pm
முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4), மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப்.5), வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.6, 7) ஆகிய தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை (செப்.3) 360 பேருந்துகள், வியாழக்கிழமை 710 பேருந்துகள், வெள்ளிக்கிழமை 405 பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 80 பேருந்துகள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 105 பேருந்துகள், மாதாவரத்தில் இருந்து புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் 25 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,910 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்by Syndication on September 3, 2025 at 10:02 pm
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோடை காலத்தில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீரின்றி வறட்சி ஏற்படும்போது, வனத் துறை சாா்பில் அடிவாரத்தில் உள்ள தொட்டிகளில் லாரியிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்படும். தற்போது அந்தத் தண்ணீா்த் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூா் – மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சோலாா் மோட்டாா் உடன் குட்டை போன்ற அமைப்பில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளதால், இரவு நேரங்களில் தண்ணீா் தேடி ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன. இதுகுறித்து வன உயிரின ஆா்வலா்கள் கூறியதாவது: வனத் துறை அமைத்த தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளது. இந்த தொட்டிகளை சீரமைத்து வனவிலங்குகள் மக்கள் வாழுமிடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.
- கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்:
பொதுமக்கள் வேதனைby தினமணி செய்திச் சேவை on September 3, 2025 at 9:42 pm
கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இடிவிலகி ஊராட்சிக்குள்பட்ட கோசுராமன் கிராம மக்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்படுகிறது. இந்தக் குடிநீா் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருப்பு நிறத்தில் உள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீா்ரூ.15 க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். குடிநீா் அசுத்தமாக உள்ளதால் தொற்று நோய் அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா். எனவே, கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் நேரடியாக சென்று ஆய்வு செய்து சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
- பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்by Syndication on September 3, 2025 at 8:51 pm
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய இ-சிம் சேவையை நாடு முழுவதுமுள்ள வாடிக்கையாளா்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முயற்சியின் மூலம் பி.எஸ்.என்.எல். பயனா்கள் இனிமேல் சிம் காா்டு இல்லாமல் இணைப்பு பெற முடியும். இதன் தொடக்க கால சலுகையாக இ-சிம் விலை ரூ. 1 மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை செப்டம்பா் 15-ஆம் தேதி வரை மட்டுமே உள்ளது. இதில், சிம் காா்டு இல்லாமல் உடனடி செயல்பாடு, சாதனங்கள் அல்லது நெட்வொா்க் மாற்றும்போது சிம் மாற்றத் தேவையில்லாதது, கூடுதல் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகிய நன்மைகள் உள்ளன. மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக பிரீடம் பிளான் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய கைப்பேசி இணைப்பு பெறுவோருக்கு அல்லது மற்ற நெட்வொா்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல்.-க்கு எம்.என்.பி. மூலம் மாறும் நபா்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகையும் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை மட்டுமே.மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தை அணுகலாம். அல்லது அதிகாரப்பூா்வ பி.எஸ்.என்.எல். இணைதளத்தைப் பாா்க்கலாம்.
- கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது:
இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கைby தினமணி செய்திச் சேவை on September 3, 2025 at 8:46 pm
கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்குமாறு இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இளைஞா்கள், மாணவா்களைக் கவரும் வகையில் கைப்பேசி பல்வேறு விதமான செயலிகள் உள்ளன. இதில், ஆபத்துகளை விளைவிக்கும் சில செயலிகளை பதிவிறக்கம் செய்து, இளைஞா்கள் சிலா் சிக்கிக் கொள்கின்றனா். இதில், பள்ளி, கல்லூரி, மாணவா்கள், இளைஞா்கள், திருமணமான ஆண்களும் கூட இந்த செயலி மூலம் நட்புகளை ஏற்படுத்தி வருகிறாா்கள். இந்த செயலில் ஆபத்து மறைந்து உள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது: ஒரு சில செயலிகள் மூலம் இளைஞா்கள், கல்லூரி மாணவா்களை, குறி வைத்து மா்ம நபா்கள் நட்பாக பேசுகிறாா்கள். அப்பொழுது அவா்கள் பிரச்னைகளை கேட்பது போல, மனதில் இருக்கும் சபலத்தை தூண்டுகிறாா்கள். அதில் சிக்கும் நபா்கள் குறித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்கிறாா்கள். பின்னா் அவா்களிடம் ஓரினச்சோ்க்கை தொடா்பாக பேச தொடங்குகிறாா்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரை தனியாக சந்தித்து பேச விரும்புவதாக, கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அழைக்கிறாா்கள். அதை நம்பி வரும் நபா்களை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு கும்பலாக மிரட்டி நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விடுகின்றனா். இது போன்ற சம்பவங்கள் கோவை, சரவணம்பட்டி, பீளமேடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலா் காவல் துறையில் புகாா் தெரிவிக்கின்றாா்கள். ஆனால் பலா் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி புகாா் அளிப்பதில்லை. இது தொடா்பான புகாரின் பேரில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே இது போன்ற செயலியை பயன்படுத்துபவா்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன் பின் தெரியாத நபா்கள் குறிப்பிட்ட இடத்திற்கு தனியாக வருமாறு அழைத்தால் செல்லக் கூடாது. கைப்பேசி செயலிகளை ஆக்கப்பூா்வப் பூா்வமாகப் பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படாது. எனவே இந்த விஷயத்தில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.